பாலக்காடு (கேரளா) : கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கஞ்சிக்கோட்டில் இருக்கும் கைராலி ஸ்டீல் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 20) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலத்த காயம் அடைந்து உள்ளனர்.
24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டபோது 100 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலையின் சூளையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அதிகாலை நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த வெடி விபத்தைத் தொடர்ந்து தீ பரவத் தொடங்கி உள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவத்தை அறிந்த அருகில் உள்ள பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆலையில் பரவிய தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
தொழிற்சாலையில் திடீரென உலை வெடித்ததற்கு காரணம் என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதி வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேநேரம், இந்த விபத்தில் எரிந்த நிலையில் அரவிந்தன் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ,காயமடைந்த பிற தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 13ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் மிராமண்டலி என்னும் இடத்தில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் ஆலையில் இயங்கி வரும் மின் உற்பத்தி நிலையத்தில் நீராவி குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தால் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிமெண்ட் நிறுவனத்தில் மாமூல் கேட்டு ரகளை செய்த கல்லக்குடி திமுக ஆதரவாளர்.. காவல் நிலையத்தில் புகார்.. வைரலாகும் சிசிடிவி!