புதுச்சேரி மாநில அரசு நிறுவனம் கான்பெட். இந்நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கான்பெட் ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள்:
காரைக்காலில் மூடி கிடக்கும் முன்று கான்பெட் பெட்ரோல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள 14 மாத கால ஊதியத்தை வழங்க வேண்டும்.
இரண்டு வருடங்களாக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த EPF மற்றும் Gratuity தொகையை கட்ட வேண்டும்.
கான்பெட் நிறுவனத்தை கான்பெட் பெயரிலேயே இயக்க வேண்டும்.
ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வங்கி கடன் மற்றும் LIC தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கட்ட வேண்டும். போனஸ் வழங்க வேண்டும்.
காரைக்காலிலேயே சம்பளம், EPF, Sales Tax வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் கான்பெட் ஊழியர்கள் காரைக்கால், அம்மாசத்திரம் கான்பெட் பெட்ரோல் பங்கில் ஐந்தாவது நாளாக அரை நிர்வாணத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம், சாலை மறியல், பிச்சையெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நாள்தோறும் அவர்கள் நடத்தி வரும் நிலையில் ஐந்தாவது நாளான இன்று (நவ.16) தங்களது நிலையை புதுச்சேரி அரசுக்கு உணர்த்தும் விதமாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேல்சட்டையின்றி அரை நிர்வாணத்தில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளமுமின்றி போனசுமின்றி தங்களால் குடும்பம் நடத்த முடியவில்லையென்றும், தீபாவளி பண்டிகையைக் கூட தங்களால் கொண்டாட முடியவில்லையென்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் மேலும் பல போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.