நாட்டு மக்களைக் காண வருகின்ற மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
மக்கள் வீடுகளையும் தெருக்களையும் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிப்பது ஓணம் பண்டிகையின் வெகு பிரசித்தமாகும். ஆண்டுதோறும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை என 10 நாள்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது.
சாதி, மத பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ள மலையாள மொழி பேசிடும் அனைத்து மக்களால் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஓணம் வரலாறு
மக்களுக்கு நல்லாட்சி புரிந்துவந்த மகாபலி மன்னனுக்கு, இந்திரலோக பதவி கிடைக்க வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதற்காகப் பல யாகங்கள் செய்துவந்துள்ளார். இதை விரும்பாத இந்திரனும் தேவர்களும், ஸ்ரீமன் நாராயணனிடம் சரணடைந்தனர் என்பது நம்பிக்கை.
கால் அளவில் மூன்றடி நிலம்
தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற நாராயணன், வாமன முனிவராக அவதாரமெடுத்து, மகாபலியிடம் சென்று, தான் செய்யும் யாகத்திற்கு தன் கால் அளவில் மூன்றடி நிலம் தானம் கேட்டார்.
அதற்கு மகாபலியோ, பொன்னும் பொருளோடு, அதிகமாகவே நிலம் தருகிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும், பிடிவாதமாக இருந்த வாமனன, தன் காலால் அளக்கும் மூன்றடி நிலம் மட்டுமே போதும் எனக் கேட்டுள்ளார்.
விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு
மகாபலியும் அதற்கிசைந்தார், அந்த நேரத்தில் வாமனனாக வந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டுள்ளார். இதைப் பார்த்து திகைத்துப் போன மகாபலி, நம்மிடம் வந்துள்ளது ஸ்ரீமன் நாராயணனே எனத் தெரிந்துகொண்டார்.
தலையைக் கொடுத்த மன்னன்
பரம்பொருளின் திருவடியையே மணி முடியாய் தலையில் ஏற்கும் பாக்கியத்தைத் தவறவிடக் கூடாது என்று கருதிய மன்னன், தன் சிரசில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். நாராயணரும் அவ்வாறே அவர் தலையில் மூன்றாவது அடியை வைத்து அழுத்தி, மகாபலியை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
மன்னன் கேட்ட வரம் என்ன?
அப்போது திருமலைத் தாங்கிய தியாக வடிவாம் மகாபலி மன்னன் திருமாலை வேண்டி வரம் ஒன்று கேட்டான். அசுரனாகப் பிறந்தாலும் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து நல்லாட்சிப் புரிந்தவன் நான்.
பாதாளத்திலிருந்து பூலோகம் வரும் மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு ரீ-என்ட்ரி
அதனால் இந்த மக்களை என்னால் மறக்க முடியவில்லை. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் அவதரித்த ஆவணி திருவோண நாளில் நான் இந்த மண்ணுலகுக்கு விஜயம் செய்ய வேண்டும்.
அப்போது இந்த மக்களை நான் ஆசிர்வதிக்க வேண்டும். இந்த மண்ணில் விளைந்திருக்கும் செல்வங்களைக் கண்டு களிக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.
அவர் வாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு ஓணத் திருநாள் அன்றும் பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வந்துசெல்வதாக நம்பிக்கை. மகாபலியை வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மக்களுக்கு ஆசி வழங்கும் மகாபலி
கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ணங்களில் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்துள்ளனர். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான 'ஓண சத்யா' என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் சமைத்து விருந்துண்டு கொண்டாடிவருகின்றனர்.
மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கிறான் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்நாளில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துச் செய்திகளையும் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஓணம் பண்டிகை - ரூ.1000 பரிசுத் தொகை அறிவித்த முதலமைச்சர்