கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசுகையில், "ஆதியோகி வீற்றிருக்கும் இடத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்.
நாம் சிவபெருமானை தந்தை என குறிப்பிடுகிறோம். அவர் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறார். இது இரு பாலையும் சமநிலைப்படுத்தும் லட்சியம் ஆகும். சிவபெருமான் பெயருக்கு ஏற்ப கருணை வடிவான தெய்வம். ஆனால் எண்ணற்ற புராணங்களில், அவர் அச்சுறுத்தும் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார். சிவனின் மற்றொரு பெயர் ருத்ரா. அதனால் தான் ராமரும், ராவணனும் சிவனை வணங்கினர். நவீன அறிவியலும் சிவனின் சில ரகசியத்தை அவிழ்க்க துவங்கியது வியக்க வைக்கிறது.