கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
தற்போது பின்லாந்தில் நடைபெற்ப குர்டோன் விளையாட்டு 2022 தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். குர்டோன் விளையாட்டில் நீரஜ் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். போட்டியின் தொடக்கத்திலிருந்து வீரர்களுக்கு வானிலை சாதகமாக இல்லை. இந்நிலையில், நீரஜ் தனது முதல் வாய்ப்பில் 86.69 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.
நீரஜின் இரண்டாவது, மூன்றாவது வாய்ப்பு ஃபவுலாக மாறியது. மூன்றாவது வாய்ப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், நீரஜ்ஜிற்கு அடுத்தபடியாக, 86.64 மீட்டர் தொலைவில் எறிந்த டிரினாட் தீவைச் சேர்ந்த கெஸ்ரான் வால்காட் வெள்ளி பதக்கம் வென்றார். ஆண்டரசன் பீட்டர் 84.75 மீட்டர் தொலைவிற்கு எறிந்து மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் சந்தீப் சவுத்ரி 60.35 மீட்டர் தொலைவில் எறிந்து 8ஆவது இடம் பிடித்தார். இம்மாத தொடக்கத்தில், நீரஜ் பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையைப் படைத்து வெள்ளி வென்றிருந்தார்.
இதையும் படிங்க:IND vs SA: இந்தியாவுக்கு 2ஆவது வெற்றி - தினேஷ் கார்த்திக் அபாரம்...