டெல்லி:தனிநபர் வருமான வரி மத்திய பட்ஜெட்டின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், புதிய வருமான வரி முறையை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
புதிய வரி முறையில், அதிக வரி அடுக்குகளை நடைமுறைப்படுத்தி, குறைந்த வரி விகிதங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் டேக்ஸ் டிடக்ஷன் எனப்படும் வரிக் கழிப்பு விலக்குகள், புதிய வரிமுறையில் இருந்து நீக்கப்பட்டன.
பழைய வரி முறையில் வரிப் பொறுப்பைக் குறைக்க வீட்டு வாடகை கொடுப்பனவு எனப்படும் HRA லீவ் டிராவல் அலவன்ஸ், கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் காப்பீட்டுத் தொகைகள் போன்ற விலக்குகள் இருந்தன. இதன் மூலம் வரி செலுத்துபவர் பல்வேறு வகைகளில் முதலீடு செய்தோ, சேமிப்பு மூலமாகவோ அல்லது செலவு செய்வதன் மூலமோ தங்கள் வரித் தொகையை குறைத்து மதிப்பிட்டு வந்தனர்.