டெல்லி: 'பரிக்ஷா பே சர்சா' என்ற தலைப்பில் மாணவர்கள் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் முன்னதாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் வாழ்வில் தேர்வு மட்டுமே கடைசி போராட்டம் என்று நினைத்துவிடக் கூடாது. இது வாழ்க்கையில் ஒரு பகுதியே” என அறிவுறுத்தினார்.
’தேர்வுகளைக் கடந்து பெட்ரோல் விலை குறித்தும் பேசுங்கள்’ - ராகுல் காந்தி - 'பரிக்ஷா பே சர்சா'
தேர்வைவிட மிக மோசமான அச்சுறுத்தலை பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் தினமும் எதிர்கொள்கின்றனர். அது குறித்தும் பிரதமர் வாய் திறந்து பேசவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் இந்தக் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில்," தினமும் தங்கள் வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை நிரப்புவதே மிகப்பெரும் போராட்டமாக உள்ளது. இது மாணவர்களின் தேர்வு அச்சுறுத்தலை விட மோசமானது. இதுகுறித்தும் பிரதமர் மோடி நம்மிடம் கலந்துரையாடுவாரா? அவர் இது குறித்தும் மக்களிடம் பேசியே ஆகவேண்டும்” என காட்டமாகக் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்களின் விலை குறைந்தாலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.