டெல்லி: ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று(ஜூன் 10) நிலவரப்படி விபத்தில் பலியான 275 பேரில், 81 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களது உடல்கள் சிதைந்திருப்பதால், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் கருவி இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிய நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே துறையின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்தது என்றும், இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த பஹானா ரயில் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் உள்ள சிக்னலிங் பேனலை ஊழியர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஐ விசாரணை முடியும் வரை பஹானா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் உள்ளிட்ட எந்த ரயில்களும் நிற்காது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.