கட்டாக்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 291 பேர் உயிரிழந்து இருந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பல்டு நஸ்கர் (26) உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்து உள்ளது.இந்த விபத்தில், 288 பேர் உயிரிழந்து இருந்த நிலையில், கடந்த சில வாரங்களில் மட்டும் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நோக்கிச் சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒன்றோடென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பாக நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு இன்டர்லாக் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாகவே, இந்த பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.