புபனேஸ்வர்: ஒடிஷா சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்சுகுரா மாவட்டம், பிரஜ்ராஜ் நகரில் நடக்க இருந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை காவல் ஆய்வாளரால் அவர் சுடப்பட்டார்.
காரை விட்டு நபா கிஷோர் தாஸ் கீழே இறங்கிய போது, அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இரு முறை சுடப்பட்டதில் நபா தாஸ் நிலைகுலைந்தார். மார்பில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நபா தாஸை துரிதமாக செயல்பட்டு அவரது ஆதரவாளர்கள், காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நபா தாஸ் புபனேஸ்வர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நபா தாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஒரு குண்டு நபா தாஸின் உடலை துளைத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும், அதில் அவருடைய இதயம் மற்றும் இடதுபக்க நுரையீரலில் பலத்த சேதம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தும் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டு நபா தாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நபா தாஸ் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.