ராயகடா: ஒடிஷா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் உள்ள கலயான்சிங்பூர் தொகுதிக்கு உட்பட்ட உபரசாஜா கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கால்வாய் மதகு இன்று (ஜூலை 31ஆம் தேதி) காலை இடிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் கால்வாயின் அடியில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், அந்த இடத்தில் குவிந்ததால் அந்த இடமே,பெரும்பரபரப்பாக காணப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் கால்வாய்க்கு அடியில் தேங்கி இருந்தது. அதில் குழந்தைகள் குளித்துக் கொண்டு இருந்த நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்து உள்ளது. கால்வாயின் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நீங்கள் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவரா - வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?
உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். அந்தக் காட்சிள், நெஞ்சை உலுக்குவதாக அமைந்து இருந்தன. அப்பகுதியில் இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், சம்பவ இடத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்து உள்ளனர். மீட்புப் படையினரும், தேடுதல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை, அதிகாரிகள் துவக்கி உள்ளனர். கால்வாய் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மழை பெய்யும் இந்த நேரத்தில், கால்வாய் மதகு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது குறித்து சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். கால்வாய் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இறுதிச் சடங்குகளுக்காக இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நான்கு அப்பாவி குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஒடிஷாவில் பயங்கரம்: 14 வயது சிறுவன் நரபலி? - பெண் சாமியார் உள்பட 4 பேர் கைது!