பால்சோர் :ஒடிசா மாநில பாலசோரில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த பிரதமர் மோடி விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். அங்கிருந்து மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீட்பு பணிகள், விபத்துக்கான காரணம், சீரமைப்பு பணிகள், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
முன்னதாக ரயில் விபத்து தொடர்பாக தலைநகர் டெல்லியில் ரயில்வே அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். விபத்து நடந்த இடத்தில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். இதனிடையே விபத்து நடந்த ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாகவும், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலக ட்விட்டரில் அறிவித்து இருந்தது.
முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கனவே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 அயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கவாச் கருவி என்றால் என்ன? ரயில்கள் விபத்தை அது எப்படி தடுக்கும்?