டெல்லி:இந்தியாவிலுள்ள அனைத்து வெளிநாட்டு குடிமக்களுக்குமான முக்கிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா விசா, கல்வி விசா மூலம் இந்தியாவிற்குள் வந்துள்ள நபர்கள் இந்திய குடிமக்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற இயலாது. அவர்கள், பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெறுவது அவசியம். இவை அனைத்தும் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் இணைக்கப்பபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வரவிரும்பும் வெளிநாட்டு குடிமக்கள், வாழ்நாள் விசாவைப் பெற உரிமை உள்ளது. ஆனால், அதற்காக அவர்கள் வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அலுவலர்கள் அல்லது சம்பந்தப்பட்ட மிஷனரிகளிடமிருந்து சிறப்பு அனுமதி பெறுவது அவசியம்.
இந்தியாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு ராஜதந்திர பணிகள் அல்லது வெளிநாட்டு அரசாங்க அமைப்புகளில் பழகுநர்களாக (internship) விரும்பினால் அதற்கான சிறப்பு அனுமதி பெறவேண்டும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட அல்லது ராஜாங்க பணிகள் நடைபெறும் இடங்களைப் பார்வையிடுவதற்கும் அவர்கள் மத்திய அரசின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டுத் துறைகளில் விமானக் கட்டணங்கள், தேசிய பூங்காக்கள், தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணம் போன்றவைகளில் எந்த மாற்றங்களும் இன்றி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
டெல்லி சமயமாநாட்டில் கலந்துகொண்ட பலர் விசா விதிமுறைகளை மீறியதால் கைது செய்யப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மத்திய அரசு, இந்தியா வரும் வெளிநாட்டினர் தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அலுவலர்களிடம் புதுப்பித்துகொண்டே இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.