நுஹ்: ஹரியானா மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட நுஹ் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, மேலும் மோதல்களைத் தடுக்க மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு மேல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நுஹ் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து உள்ளதாக போலிசார், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1ஆம் தேதி) தெரிவித்து உள்ளனர். குருகிராம் பகுதியில் ஒரு மசூதி தாக்கப்பட்டுள்ள சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திங்களன்று (ஜூலை 31ஆம் தேதி) நுஹ் மாவட்டத்தில் நடந்த குழு வன்முறையில் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை குருகிராம் பகுதியிலும் பரவிய நிலையில்ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நுஹ் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 31ஆம் தேதி, இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததை அடுத்து நூஹ் மாவட்டத்தில் மொபைல் இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த வன்முறை விவகாரம் குறித்து, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த பகுதியில், இணையதள சேவைகள் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளன. மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வன்முறையில் சிக்கித் தவித்த அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் குறிப்பிட்டு உள்ளார்.