நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கர்நாடக வேளாண்துறை அமைச்சர் பி.சி. பாட்டில், விதிகளை மீறி ஹைரேகூரில் அமைந்துள்ள தனது வீட்டிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இந்த செயல் கரோனா தடுப்பூசி விநியோக நெறிமுறைகளுக்கு எதிரானது" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி விதிமீறல் குறித்து மாநில அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.