ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், செப்டம்பர் 25ஆம் தேதி 91 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிபி ஜோஷியிடம் சமர்ப்பித்ததுள்ளனர். இவ்வளவு எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட வற்புறுத்தவோ அல்லது அவர்களின் கையெழுத்து போலியாக போடப்படவோ சாத்தியமில்லை. இப்படி இருக்கையில், இந்த ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
சட்டப்பேரவை நடைமுறை விதி 173இன் கீழ், எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்தால், சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுமட்டுமல்லாமல் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் சிலர் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். இந்த ராஜினாமா உண்மையானதா இல்லையா என்பதே தெரியவில்லை.
ஆகவே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் சிபி ஜோஷி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி வி.கே.பர்வானி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த ராஜினாமா குறித்து சபாநாயகர் சிபி ஜோஷி மற்றும் பேரவை செயலாளர் இருவரும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தரப்படும் உதவிகளை உறுதிசெய்க - மத்திய அரசுக்கு உத்தரவு