ஶ்ரீநகர்:சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ்குமார், இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படலாம் என்றும், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத புதிய பிரிவினர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதேநேரம், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 லட்சம் புதிய வாக்காளர் சேர்க்கப்படவுள்ளதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என்றும், அதில் உண்மை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது.