ஹைதராபாத் : கர்நாடக பாஜகவில் மீண்டும் உள்கட்சி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு (79) எதிராக கட்சி நிர்வாகிகள் மற்றும் சில மூத்தத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எடியூரப்பா தாமாக முன்வந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்களும் சப்தமின்றி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) டெல்லி சென்ற முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இல்லை.. இல்லவே இல்லை...
இதையடுத்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. எடியூரப்பா பதவி விலகவுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் எடியூரப்பா இன்று (ஜூலை 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நான் பதவி விலக மாட்டேன். நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரவியுள்ளன.
மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்
இந்த மதிப்பற்ற வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இல்லவே இல்லை.. மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பேசவே சென்றேன்” என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்து பேசினார். மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேகதாது திட்டம் ஏன்?
தொடர்ந்து அவர் கூறுகையில், “மேகதாது அணைத் திட்டத்தின் நோக்கம் பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதேயன்றி வேறு இல்லை. இரு மாநில அரசுகளும், உறவுகளை வலுப்படுத்துவதற்கும், உடன்பிறப்புகளை போல் வாழ்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்றார்.
எடியூரப்பாவிற்கு மாநில மூத்தத் தலைவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு, ஈஸ்வரப்பாவுடன் நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எடியூரப்பா பிரதமரைச் சந்தித்ததன் பின்னணி என்ன?