எர்ணாகுளம்: கேரள மாநிலத்தில் கக்கநாடு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இருவருக்கு நோரோ வைரஸ் (Norovirus) பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து எர்ணாகுளம் பகுதியில் மொத்தம் மூன்று மாணவர்கள் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடல்நிலை நிலையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “இந்த நோரோ வைரஸ் என்பது விலங்குகளிலிருந்து பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும். எனவே நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் குமட்டல் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் ORS கலவையை, சுட வைத்து ஆறவைத்த தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஆனால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தீவிரமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.