டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று (டிச. 21) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் 'போக்சோ சட்டம் 2012' நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழுள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அத்தகைய குற்றங்களை தடுக்கும் வகையில், இந்த சட்டத்தில் 2019 ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில், நடைமுறைகள் சேர்க்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஒருவேளை குழந்தைகள் ஈடுபடும்போது, சிறப்பு நீதிமன்றம் மூலமாக அவர்களின் வயதை தீர்மானிக்கும் வகையில் போக்சோ சட்டம் பிரிவு 34இல் நடைமுறைகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன.