ஹைதராபாத் : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதன்கிழமை முதல் முறையாக நவ்ஜோத் சிங் சித்து காணொலியில் தோன்றினார்.
அப்போது, “தனக்கு யாருடனும் தனிப்பட்ட போட்டி இல்லை, பொதுமக்களுக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து சித்து கூறுகையில், “எனக்கு யாருடனும் தனிப்பட்ட போட்டி இல்லை; எனது அரசியல் வாழ்க்கையின் 17 வருடங்கள் ஒரு நோக்கத்திற்காகவும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்காகவும் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காகவும் இருந்தது. இது என்னுடைய ஒரே மதம்” என்றார்.
முன்னதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய சித்து, “பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. எனவே, நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸிற்கு தொடர்ந்து சேவை செய்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.
சித்து ராஜினாமா செய்த பிறகு மாநிலத்தில் தொடர் ராஜினாமாக்கள் செய்யப்பட்டன. சித்துவுக்கு நெருக்கமாக கருதப்படும் ஒரு அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் பதவியில் இருந்து விலகி, காங்கிரஸிற்கு நெருக்கடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?