கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியா உள்பட உலக நாடுகள் கரோனா பெருந்தொற்றால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இப்பெருந்தொற்றை முழுவதும் நீக்கும் முயற்சியில், இந்தியா உள்பட உலக நாடுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் இத்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அனைத்து தரப்பு வயதினருக்கும் தடுப்பூசி செல்லும் பணியை, மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்ட நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் பல மாநிலங்களில் தொடங்கவில்லை.
கண்மூடித்தனமாகபயன்படுத்தக்கூடாது
இந்த நிலையில், நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் ஆர்வத்தை விட, நோய் தொற்றால் பாதிப்பட்டவர்கள், மிகுந்த ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்திய பொது சுகாதார சங்கம் (ஐபிஹெச்ஏ), இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (ஐஏபிஎஸ்எம்) மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (ஐஏஇ) ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்கள், இது தொடர்பான பரிந்துரை அடங்கிய அறிக்கை வெளியிட்டுள்ளனர்.