டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் ஆப்தாப் அமின் பூனாவாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ பரிசோதனை) நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கி 5 நாள்கள் அவகாசம் கொடுத்தது. இதன்படி இன்று (நவம்பர் 21) உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சோதனை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தடய அறிவியல் ஆய்வக (FSL) உதவி இயக்குநர் சஞ்சீவ் குப்தா கூறுகையில், "அமின் பூனாவாலாவிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படாது. இதற்கு முன்பாக பாலிகிராஃபிக் சோதனை நடத்தப்பட உள்ளது. 10 நாட்களுக்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இந்த சோதனை நீண்ட மருத்துவ செயல்முறையாகும். அதாவது எஃப்எஸ்எல் நிபுணர் பிரிவு, புகைப்படப் பிரிவு, போதைப்பொருள் நிபுணர் பிரிவு, காவலர் பிரிவு என பல்வேறு குழுக்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். அவர்களும் சட்டப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி கிடைத்தவுடன் சோதனை தேதி குறித்து தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.