கோழிக்கோடு (கேரளா):கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 42 நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் முடிவில், புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. சில மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் வெளியாகும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நிபா வைரஸ் கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அந்த வைரஸின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. நிபா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 42 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.
அதன் முடிவுகள் எதிர்மறையாக வந்த நிலையில், புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இன்று காலை மேலும் சிலரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிய உறவில் அதிகமானோர் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தொலைபேசி மூலமாக அழைத்தபோது, அவர்கள் அங்கு இல்லை என்று மறுக்கிறார்கள். எனவே, அவர்களின் மொபைல் டவர் இருப்பிடங்கள் மூலம் ஆராய்ந்து, பாதிக்கப்பப்ட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல் துறையினரின் உதவியை நாடியுள்ளோம்.