பெங்களூரு:2024ஆம் ஆண்டில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் இதுவரை எந்த விவாதமும் செய்யவில்லை எனவும் எடியூரப்பா கூறிய தகவல் அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணி பல்வேறு வியூகங்களை வகித்து வருகிறது. அதேபோல் மாநிலக் கட்சிகளும் தேர்தல் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சிகளுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது," கர்நாடகாவைப் பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி இணைந்துள்ளதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்" கூறியிருந்தார்.