டெல்லி:அரசியல் மற்றும் பொருளாதார இடைத்தரகரான நீரா ராடியாவின் ஆடியோக்கள் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. அதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் நீரா ராடியா உரையாடியிருந்ததாகப் புகார் எழுந்தது.
குறிப்பாக 2ஜி ஏலத்தில் சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை விற்பனை செய்ய வேண்டும் என ஆ.ராசாவிடம் நீரா ராடியா கேட்டதாக கூறப்பட்டது. மேலும் பலரிடம் சட்டவிரோதமாக ஏராளமான டீல்களை பேசியதாகவும், இதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த ஆடியோ வெளியான சம்பவம் அப்போதைய அரசியல் சூழலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ 14 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீரா ராடியாவின் ஆயிரக்கணக்கான செல்போன் உரையாடல்களைக்கைப்பற்றி சிபிஐ ஆய்வு செய்து வந்தது. சுமார் 12 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.