தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி... ஆட்சியை தக்கவைத்தது பாஜக! - மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

No Confidence Motion Defeat in Lok Sabha எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்து உள்ளார்.

Lok sabha
Lok sabha

By

Published : Aug 10, 2023, 7:31 PM IST

Updated : Aug 10, 2023, 7:51 PM IST

டெல்லி :எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் மக்களவையில் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவாகரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம், பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி கடந்த ஜூலை 26 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது.

மக்களவை எதிர்க்கட்சி துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர்.

அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக உரையாற்றினர்.

அதேபோல் மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், அமித் ஷா உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு எதிராக உரையாற்றினர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட். 10) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 3வது நாள் விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தில் பிரதமர் மோடி காலந்து கொண்டு உரையாற்றினார்.

ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரையின் இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதையும் படிங்க :நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் மோடி உரை... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Last Updated : Aug 10, 2023, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details