ஹைதராபாத்:சும்மா உட்கார்ந்திருந்தால் உயிருக்கு ஆபத்து என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதிக நேரம் உட்கார்ந்தால், தூங்கினால், பேசினால் உயிருக்கு ஆபத்து என்ற வரிசையில் தற்போது அதிக நேரம் ஏதும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால் விரைவில் இறக்க நேரிடும் என ஃபின்லேண்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஃபின்லேண்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ அக்பஜே, குயோபியோவில் உள்ள கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகம் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில், குழந்தைகளின் குழந்தை பருவம் முதல் முதிர் வயது வரை ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில், 11 வயது 15, 17 வயது என பல்வேறு அடிப்படைகளில் குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் மொத்தம் 766 குழந்தைகள் உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் 55% பெண் குழந்தைகளும் 45% ஆண் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 11 வயதிலிருக்கும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்விற்காக அவர்களின் கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டப்பட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. தேர்வு செய்யப்பட்ட இந்த குழந்தைகளை 7 நாட்கள் வரை கண்கானித்து அவர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார். பின்னர் இது அவர்களின் 15 வயதில் தொடரப்பட்டது. அப்போது அவர்களின் பழக்க வழக்கம், அதில் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு அவர்களின் 24 வயது வரை தொடரப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வில் பங்குபெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்ததில், எந்த செயலிலும் விருப்பம் காட்டாமல், எந்த செயலும் செய்யாமல் அமைதியாக இருக்கும் குழந்தைகளுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக்ஸ் போன்ற நோயின் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 11 வயதில் குழந்தைகளின் அசமந்த நிலை சராசரியாக 363 நிமிடங்களாக கணக்கிடப்பட்ட நிலையில், 15 வயதில் 472 நிமிடங்களாகவும், அதே நிமிடங்கள் 24 வயதில் 531 நிமிடங்களாக சராசரியாக 169 நிமிடங்கள் அதாவது 2.8 மணி நேர கணக்கில் உயர்ந்துள்ளது.
இந்த அசமந்த நிலை, குழந்தைகளுக்கு சீறிய பக்க விளைவுகளாக இதயம் பலவீனம், மாரடைப்பு, ஸ்ட்ரோக்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளை பெற்றோர்கள் ஏதேனும் ஒரு முயற்ச்சியில் ஈடுபடுத்துவதற்கு உதவ வேண்டும் என்றும் கணினி, மொபைலில் அதிகளவில் மூழ்காதிருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ அறிவுறுத்தியுள்ளார்.