டெல்லி :டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பரிந்துரை செய்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன் வரை 52 சதவீதமாக இருந்த டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 18 சதவீதமாக குறைந்து உள்ளது. நாட்டில் ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், டீசல் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கக் கூடாது.
டீசல் வாகனங்கள் காற்று மாசு உள்ளிட்ட இயற்கை சூழலை கெடுக்கும் கார்பன் உமிழ்வை அதிகளவில் வெளியிடுவதால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க பரிந்துரைத்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
தொடர்ந்து இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ பரிசீலனை ஏதும் அரசிடம் இல்லை. 2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியமாக உள்ளது என கூறியுள்ளார். இந்த எரிபொருள்கள் இறக்குமதி, செலவு குறைந்ததாகவும், உள்நாட்டு மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்" என்று அந்த பதிவில் நிதின் கட்காரி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :டிஜிட்டல் கட்டமைப்பில் ஜி20 நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை - இந்தியாவிற்கு பில்கேட்ஸ் பாராட்டு!