டெல்லி : நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நடப்பாண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இதன் காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடப்பாண்டில் ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி வரை இரு அவைகளும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடரை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். ஏறத்தாழ 65 மணி நேரம் 14 அமர்வுகளாக நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் 2 ஆயிரத்து 300 கேள்விகள் எழுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.