டெல்லி:டெல்லியில் நேற்று(ஆகஸ்ட் 1) நடந்த மக்களவை கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு தேக்க நிலையும் ஏற்படவில்லை எனவும், உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது” என கூறினார். ஆனால் இந்த பதில் திருப்தியாக இல்லை என காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ‘கரோனா தொற்றால் ஊரடங்கு, பல நெருக்கடிகள் என அனைத்திற்கும் இடையில் இந்திய பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.
"தற்போது சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. 2004 முதல் 2014 வரையிலான ஆட்சியில், இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. அந்த காலகட்டத்தில், தொடர்ந்து 22 மாதங்களுக்கு பணவீக்கம் 9 சதவீதத்திற்கு மேல் இருந்தது" என்று அவர் கூறினார். பணவீக்கத்தின் பெரும்பகுதி உணவு மற்றும் எரிபொருளில் உள்ளது. "உலகளவில் உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் குறைந்து வருகிறது, இந்தியாவிலும் அது குறையும்," என்று கூறினார்.