தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’அறிவுசார் சொத்துரிமையில் இந்தியா வல்லரசு ஆகும் வகையில் திட்டம்’ - IIT Madras Summit on CSR

அறிவுசார் சொத்துரிமையில் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

By

Published : Dec 18, 2022, 11:07 PM IST

சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகமான, ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் 29 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு துல்லியமாக சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

கம்பெனிகள் சட்டத்தின் படி, ஏதாவது ஒரு நிதி ஆண்டில் 5 கோடி ரூபாய்க்கு நிகர லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் முந்தைய மூன்று ஆண்டு கால லாபத்தின் சராசரியில் இரண்டு சதவிகிதத்தைச் சமூக வளர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை அதாவது, சி.எஸ்.ஆர் (கார்ப்பரேட் ரெஸ்பான்சிபிலிட்டி பண்ட்) நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவோ, சொந்த அறக்கட்டளை மூலமாகவோ, லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவோ செலவழிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "எதிர்காலத்தின் சிறந்த தொழில்நுட்பங்களை நோக்கி" என்ற தலைப்பில், கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை நிறுவனத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அவர், சமூகப் பொறுப்பு நிதி மூலம் இந்தியப் பொருளாதாரக் கனவுகளை இயக்கவும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தினார்.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான காப்புரிமை தாக்கல், அறிவுசார் சொத்து விருதுகள் போன்றவற்றிற்கான நிறுவனமாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாறி உள்ளதாகவும், அதேநேரம் கொள்கைச் சூழல், மற்றும் காப்புரிமைத் தாக்கல் விரைவுபடுத்துவதை மேற்கொள்ளாவிட்டால் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியாது என்றார்.

2016ஆம் ஆண்டு, ஸ்டார்ட்அப் நிறுவன அறிமுக கொள்கை அறிவிக்கப்பட்ட போது, ​​பல செயல்முறை கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இதனால் காப்புரிமை பெற 72 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் தற்போது கடந்த டிசம்பர் 2020-ல் 12 அல்லது 24 மாதங்கள் என குறைந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உள்நாட்டில் காப்புரிமை தாக்கல் செய்வது அதிகரித்துள்ளதாகவும், 2021ஆம் ஆண்டில் மொத்தம் 58 ஆயிரத்து 502 காப்புரிமைகள் புதிதாக தாக்கல் செய்யப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2016 முதல் 2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 20 ஆயிரம் வர்த்தக டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு முந்தைய 75 ஆண்டுகளில் வெறும் 11 லட்சமே பதிவாகி இருந்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காப்புரிமை தாக்கல் செய்ய ஆகும் செலவில் ஏறத்தாழ 80 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அறிவுசார் சொத்துரிமையில் இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி எழுதிய பொறியாளர்களுக்கான தரவு அறிவியல் புத்தகத்தை வெளியிட்டார்.

இதையும் படிங்க:"வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details