லக்னோ:உத்தரப் பிரதேசம், ஆக்ரா மாவட்டம், எட்மதுப்பூர் எனும் பகுதியில் இன்று (மார்ச்.11) காலை கார் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆக்ராவில் கார்-லாரி மோதி விபத்து: 9 பேர் பலி
ஆக்ராவில் கார்-லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் காவல் துறையினர் விபத்து குறித்து கூறுகையில், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று இன்று அதிகாலை சுமார் 5.15 மணிக்கு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, வாகனம் சாலையில் உள்ள தடுப்புகளைக் கடந்து எதிர்திசையில் பயணிக்கத் தொடங்கியது. இதனால் சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து எந்தத் தகவல்களும் தற்போதுவரை சரியாகத் தெரியவில்லை. படுகாயமடைந்தவர்கள் ஓரளவேனும் குணமடைந்த பின்னரே அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்த தகவல்களைப் பெறமுடியும். உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம். விரைவில் விபத்து குறித்து தீவிர விசாரணை தொடங்கப்படும்" என்றனர்.