அமராவதி : ஆந்திர பிரதேசத்தில் உயர்நிலை படிப்புகள் எனக் கூறப்படும் இடைநிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில், 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முயன்ற இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் இடைநிலைத் தேர்வுகள் எனக் கூறப்படும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்த நிலையில், ஆந்திர பள்ளிக் கல்வித் துறை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த மாணவர்கள் ஸ்ரீகாகுளம், சித்தூர், விசாகப்பட்டணம், அனந்தபூர், என்.டி.ஆர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம், தண்டு கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், பிளஸ் 1 தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் விசாகப்பட்டிணம் மாவட்டம் திரிநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ் 1 தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளாது. அதே மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.