தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம் 2' படத்தில் டேனி கதாபாத்திரத்துடன் இணைந்து நடித்தவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நடிகர் சக்விம் மால்வின். இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடா, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள்கள் கும்பலைப் பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அப்போது பெங்களூருவில் உள்ள கடுகோண்டனஹள்ளி பகுதியில், போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்றுவருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்துசென்ற காவல் துறையினர் அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் சக்விம் மால்வின் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். அதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் திரைத் துறையைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப் போதைப்பொருள் வழக்கில் வேறு ஏதேனும் நடிகர்கள், நடிகைகள் சம்மந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நடிகர் சக்விம் மால்வின் 2006ஆம் ஆண்டு மருத்துவ விசாவில் மும்பை வந்த அவர், அங்குள்ள நியூயார்க் ஃபிலிம் அகதாமியில் சேர்ந்து நடிப்பு பயின்றார். அதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவிலேயே தங்கி திரைப்படங்களில் நடித்துவந்தார்.
இதையும் படிங்க: ஹரி ஸ்டாப்; சிவா ஸ்டார்ட் - ‘சூர்யா 42’ தயாரிப்பாளர் ரெடி!