டெல்லி: இந்தியா - வங்கதேச எல்லையில் வசிக்கும் மனித கடத்தல்காரர்கள் சிலர், மனித கடத்தல் மற்றும் எல்லை தாண்டிச் செல்லும் நபர்களுக்கு போலி அடையாள ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், "எல்லை தாண்டி வரும் நபர்களுக்கு இந்தியாவில் நுழைய மனித கடத்தல்காரர்கள் ஆதார் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை உள்ள போலி ஆவணங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருகின்றனர் என தெரிவித்தார். மேலும் என்ஐஏ நடத்திய விசாரணையில், இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதி, நாடு தாண்டி வரும் நபர்களைக் கடத்த மனித கடத்தல்காரர்களின் போக்குவரத்துப் பாதையாகவே மாற்றியுள்ளதாதவும் தெரிய வந்துள்ளது.
இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதியில் வங்கதேசம் மற்றும் மியான்மார் நாட்டினைச் சேர்ந்தவர்களைக் கடத்தும் மனித கடத்தல் தொடர்பாக என்ஐஏ தனி கவனம் செலுத்தி, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், மனித கடத்தலில் ஈடுபடும் கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதி பெரிய நெட்வொர்க்கின் இணைப்புப்பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் எல்லை தாண்டி கடத்தப்படும் நபர்களுக்கு போலியான இந்திய அடையாள ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர் என என்ஐஏ விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை, கடந்த 2023ஆம் ஆண்டு டிச.29ஆம் தேதி இந்தியா - வங்கதேச எல்லையில் திரிபுரா வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 குற்றவாளிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் வங்கதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக சர்வதேச எல்லைக்கு அப்பால் உள்ள கடத்தல்காரர்களுடன் ஒருங்கிணைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.