திருவனந்தபுரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முக்கிய ஆர்வலர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று (செப்-22)அதிகாலை சோதனை குறித்த செய்திகள் வெளியானதைத்தொடர்ந்து PFI தொண்டர்கள் சோதனைகள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அணிவகுத்துச் சென்றனர்.
மேலும் அதன் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னதாகவே சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு கேரள மாநிலத்திலும் இத்தகைய சோதனை நடைபெற்றது.
குறிப்பாக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக PFI வட்டாரம் தெரிவித்துள்ளது. முக்கியமாக மாநில மற்றும் மாவட்ட குழுக்களின் அலுவலகங்கள் மற்றும் அதன் அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தேசிய, மாநில மற்றும் மாவட்டத்தலைவர்கள் உட்பட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 14 நிர்வாகிகள் மத்திய அமைப்புகளால் மாநிலத்தில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பிஎஃப்ஐ செய்திக்குழு தெரிவித்துள்ளது.
பிஎஃப்ஐ மாநிலத்தலைவர் சிபி முகமது பஷீர், தேசிய தலைவர் ஓஎம்ஏ சலாம், தேசிய செயலாளர் நசருதீன் எளமரம் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொச்சியில் உள்ள என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.