திருவனந்தபுரம்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, சதித் திட்டம் தீட்டியது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா(பி.எஃப்.ஐ) அமைப்பை சட்டவிரோத செயல்பாடுகள் தடைச் சட்டமான உபாவில் மத்திய அரசு தடை செய்தது.
மேலும் பி.எஃப்.ஐ. அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வந்த நிலையில், பி.எஃப்.ஐ அமைப்பின் ஒரு பிரிவு, பயங்கரவாத செயல்களில் ஈடுபட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை திரட்டியதாகவும், அதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து என்.ஐ.ஏ. நீதிமன்றம், வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் காவலை மேலும் 90 நாட்களுக்கு நீடித்து விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்கியது.