பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாதா நகரில் வசித்து வந்த ஆரிஃப் என்பவர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இன்று (பிப். 11) கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தரப்பில், ஆரிஃப், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாளராக இருந்தார். இதனிடையே வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தார். இவருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், அவரை கண்காணித்து வந்தோம்.
இந்த கண்காணிப்பு மூலம் அவர் 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் டெலிகிராம் குழுக்களில் இவர் உறுப்பினராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, மாநில பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் சேர்ந்து அவரை கைது செய்துள்ளோம்.