புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீது குற்றச் சதி, நாட்டிற்கு எதிரான வன்முறை, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மற்றும் காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் வியாழக்கிழமை (மே19) குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு எதிராக உபா (UAPA) உள்பட அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் தண்டனையின் அளவு குறித்த வாதங்கள் மே 25 அன்று அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் மாலிக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விசாரணையின் நிறைவு நாளில், அவர் மீது சுமத்தப்பட்ட சட்டப் பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலுக்கான சதி) உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்த்து வாதாடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.