ஜகித்யாலா: இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பின் அலுவலகம், தெலங்கானா மாநிலத்தின் ஜகித்யா மாவட்டத்தில் உள்ள ஜகித்யாலா நகரில், கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது முதலே, பல்வேறு வழக்குகள் இந்த அமைப்பின் மீதும், இந்த அலுவலகம் மீதும் போடப்பட்டுள்ளது. அதிலும், ஜகித்யாலா மற்றும் நிஜாமாபாத் ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பால் அமைக்கப்பட்ட மையங்களில் தற்காப்பு கலை என்ற பெயரில், பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக 200 பேர் சிக்கினர்.
இதனையடுத்து ஜகித்யாலா மாவட்டத்தில் மட்டும் 8 பேர் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் குற்றவியல் எண் 141/200இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மற்றுமொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், செப்டம்பர் மாதத்தில் தேசிய புலனாய்வு முகமை தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்தது. அதேநேரம், இந்த அமைப்பின் அலுவலகக் கிளைகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல இடங்களில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நிஜாமாபாத்தில் உள்ள இதன் மையத்தில் பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது.
அதேநேரம், மாநிலம் முழுவதும் இது தொடர்பாக 38 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது. இதன் மூலம் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பல செயற்பாட்டாளர்கள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், ஜகித்யாலாவில் உள்ள 7 இடங்களில் என்ஐஏ சோதனை செய்தது.
இந்த சோதனையின் முடிவில் உஷ்மான்புராவில் இருந்த முகமது இர்பான் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அப்துல் சலீம் என்பவரது பெயரும் குற்றவாளி பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜகித்யாலா மாவட்டத்தின் இஸ்லாம்புராவைச் சேர்ந்த அப்துல் சலீம், நிஜாமாபாத் மாவட்டத்தின் மலப்பள்ளி முஜாஹித் நகரைச் சேர்ந்த முகம்மது அப்துல் அஹத் மற்றும் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காஜா நகர் புச்சிரெட்டிபலென் மண்டல் பகுதியைச் சேர்ந்த ஷேக் இலியாஸ் அகமது ஆகிய 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 பேர் குறித்த சரியான தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், தகவல் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் என்ஐஏ உறுதி அளித்துள்ளது.
ஆனால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதில் ஒருவரான அப்துல் சலீம் என்பவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து, தெலங்கானா மாநிலத்தின் இஸ்லாம்புராவில் வாடகைக்கு இருந்து, பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:NIA Raids: பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் கைது?