மியான்மரின் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசிடமிருந்து அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. மியான்மர் தலைவரும், அந்நாட்டு அரசின் ஆலோசகருமான ஆங் சான் சூகி, ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவசரநிலை அறிவிப்பையடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் ஓராண்டு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என ராணுவம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு கிளர்ச்சி வெடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதுவரை அங்கு 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் எழுந்துள்ளதன் காரணமாக வங்கதேசம், இந்தியா, மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் எல்லை மாநிலமான மிசோரத்தின் சம்பாய், செர்சிப், சியாஹா ஆகிய மாவட்டங்களில் 11 காவலர்கள் உள்ளிட்ட 46-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டினர் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை மியான்மர் நாட்டுக்கே மீண்டும் அனுப்ப அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள் அதற்கு தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், அரசுசாரா அமைப்பான சித்திரவதைக்கு எதிரான தேசியபரப்புரைக்(என்.சி.ஏ.டி.) குழுவானது, மியான்மரிலிருந்து வந்த ஏதிலிகளின் புகலிடக் கோரிக்கைகளை ஏற்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (என்.எச்.ஆர்.சி.) வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. கூடுகையின் ஒருங்கிணைப்பாளர் சுஹாஸ் சக்மா கூறுகையில், “மியான்மரிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் அடையும் ஏதிலிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, சர்வதேச சட்டத்தின்கீழ் அவர்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகளுக்கிணங்க உதவிகளை வழங்க வேண்டும்.
மியான்மர் ஏதிலிகளை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பக் கூடாது. உயிருக்குப் பயந்து தப்பியோடிவரும் ஏதிலிகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வர வேண்டும்.
அவர்களது புகலிடம் விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவெடுக்க இந்தியாவில் எந்தவொரு சட்டமும், நெறிமுறையும் இல்லாததால் உள்நாட்டின் பாதுகாப்பு காரணம் காட்டி அவை நிராகரிக்கப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின்கீழ் இந்தியாவிற்குள் நுழையும் மியான்மர் ஏதிலிகளுக்குத் தங்களது வாழ்க்கையை வாழ்வதற்கான முழு உரிமை உண்டு. இந்தியாவின் அரசியலமைப்பு கடமைகளை மீறுவதால், என்.எச்.ஆர்.சி. தனது கடமைகளை நிறைவேற்ற தலையிட வேண்டும். சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. மன்றத்தின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு அரசாக இந்தியா விளங்குவதால் யூ.என்.சி.ஏ.டி., பிரிவு 3 (1)யின்படி ஏதிலிகளை ஏற்க இந்திய அரசு மறுப்பு தெரிவிக்கக் கூடாது.
அமைதியான வழியில் போராடிவரும் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து மியான்மரிலிருந்து தப்பியோடிவந்த 11 காவலர்கள் உள்ளிட்ட ஏதிலிகளை மியான்மர் நாட்டுக்கே மீண்டும் நாடு கடத்த இந்திய அரசு உத்தரவிட்டால், அவர்களின் பெரும்பாலானவர்கள் சித்திரவதைகளையும், மரண தண்டனையையும் சந்திக்க நேரிடும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க :பாலின சமத்துவமின்மையை அகற்ற அனைவரும் முன்வர வேண்டும் - ராம்நாத் கோவிந்த்