இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சட்டவிரோதமான குற்றத்தொழிலாக மனிதக் கடத்தல் கருதப்படுகிறது. உலகளவில் திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவமான இத்தகைய குற்றங்களில் அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
உலகளாவிய அச்சுறுத்தலான கரோனா நெருக்கடி சூழலில் இந்தியாவில் மனிதக் கடத்தல் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 90 விழுக்காடு கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. நாடு முழுவதும் முன்னெப்போதுமில்லாத அளவில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையான பாதிப்பைக் கண்டுள்ளனர்.
இதனைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 12 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மனிதக் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க மத்திய அமைச்சகங்கள் மூலமாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் அறிக்கையாக சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடி ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பின் காரணமாக, பல ஏழை குடும்பங்கள் கடுமையான வறுமைச்சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை கடத்தல்காரர்கள் இலக்காக வைக்கின்றனர். கடத்தலுக்கு காரணமான முக்கிய காரணிகளில் வறுமையும் பேரிடரும் பெரும்பங்கு வகிக்கின்றன.
கடத்தல் சம்பவங்கள் முறையாகப் பதியப்படாமல் இருப்பது அதனை மேலும் ஊக்குவிக்கின்றது. இது கடத்தல்காரர்கள், பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை கொத்தடிமை, கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல் போன்றவற்றில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும்.
எனவே, தற்போதைய சூழலில், மனிதக் கடத்தலை தடுக்க ஒரு வலுவான மற்றும் விரிவான சட்டம் தேவை என்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் உணர்ந்துள்ளது. இது தொடர்பாக ஆராய ‘மனித உரிமைகள் மீதான கோவிட் -19 நெருக்கடியின் தாக்கம் குறித்த ஆராயும் வல்லுநர் குழு’ என்ற பெயரில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயாதீன கள வல்லுநர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அக்குழுவானது, மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்த ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :'விவசாயிகள் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்' - நரேந்திர சிங் தோமர்