ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான பர்வைஸ் என்ற சிறுவன், சிறுவயதில் தீ விபத்தில் சிக்கி தன்னுடைய ஒரு காலை இழந்துவிட்டார். செயற்கைக்கால் பொருத்தும் அளவுக்கு அவரது குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லை.
இவர், பர்வைஸ் நவ்காமில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு தினமும் ஒற்றைக்காலிலேயே நடந்து சென்று வருகிறார். படிப்பிலும் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள பர்வைசுக்கு அரசு சார்பில் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
ஆனால், கிராமத்தின் சாலைகள் மோசமாக இருப்பதால் அதை அவரால் பயன்படுத்தமுடியவில்லை. இந்த நிலையில், பர்வைஸ் ஒற்றைக் காலில் தினமும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட ஜெய்ப்பூர் ஃபூட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரேம் பண்டாரி, பர்வைசுக்கு இலவசமாக செயற்கைக்கால் பொருத்த முன்வந்துள்ளார்.
தனது தொண்டு நிறுவனம், சர்வதேச அளவில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும், பர்வைசின் வீடியோவை பார்த்ததும் அவரது குடும்பத்தினரை தான் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு செயற்கைக்கால் பொருத்த நிச்சயம் உதவுவேன் என்றும் பிரேம் பண்டாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க:உ.பி. ரசாயன ஆலையில் பாய்லர் வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு