பணப்பட்டுவாடா நடைபெறும் பகுதிகள், பெரிய அளவிலான பணம் பிடிக்கப்படும் பகுதிகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் அவர் கூறுகையில்,''தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 234 சட்டப்பேரவைத் தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 3585 ஆண்கள், 411 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் போட்டியிடுகின்றனர்.
மேலும், புதிய வாக்காளர்களுக்கு 30ஆம் தேதிக்குள் விரைவுத்தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு பதற்றமான பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் 88,937 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் மிக பதற்றமானவை 300, பதற்றமான வாக்குச்சாவடிகள் 10,528 உள்ளன.
இதையடுத்து, 44,468க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் நேரலையாக காட்சிகள் பெறப்பட உள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய அனைவருக்கும் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வருமான வரித்துறையினர் தங்களுக்கு வரும் தகவலின்படி சோதனைகள் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு, தனி நடைமுறைகள் உள்ளது என்றும்; பணம் பிடிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.