சண்டிகர்(பஞ்சாப்):இன்னும் இரு நாட்களில் 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று புத்தாண்டு பிறக்க உள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குழைக்க, சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பயங்கரத் தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. பஞ்சாப் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த ஆர்.பி.ஜி வகை வெடிகுண்டுகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நாட்டின் எல்லையில் காத்துக் கொண்டிருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் மாநில அரசு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
மேலும் பயங்கரவாத மிரட்டலை உறுதிப்படுத்திய லூதியானா பகுதி ஐ.ஜி. கவுஸ்தப் சர்மா, தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த அளவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மொகாலி காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் ஆர்.பி.ஜி வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் ஊடுருவிய பயங்கரவாதியிடம் இருந்து ஆர்.பி.ஜி. லாஞ்சரை போலீசார் கைப்பற்றிய நிலையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் சிரப் குடித்து 18 குழந்தைகள் பலி: இந்தியாவின் பதில் என்ன?