இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற நிலை அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் பலரும் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். சிலர் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இல்லாமல் வேறு துறையில் பணிபுரிந்து வருவர். இதற்கு ஆய்வுகள், தரவுகள் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் தொழில் நுட்பம், காலச்சூழலுக்கு ஏற்ப வகுப்பறைக் கல்வியில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. வகுப்பறைக் கல்விக்கும் தொழில் துறை திறன்களுக்கும் இடைவெளி அதிகரித்துள்ளது.
ஐடி, இன்ஜினியரிங், பிற நிறுவனங்கள் என 60 விழுக்காடு நிறுவனங்களில் திறமையான ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கூறுகையில், இந்தியா முழுவதும் 10 கோடி வேலை வாய்ப்புகள் இருந்தும், அந்த வேலைகளுக்கு ஏற்ற திறமையானவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவே கூறுகிறது.
இளைஞர்கள் இந்த வேலைக்கான தகுந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். 20க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகம் மற்றும் அதன் துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திறன்-மேம்பாடு திட்டங்கள் இந்த நோக்கத்திற்கு உதவினாலும், குறைந்த அளவிலேயே செயல்படுத்தப்படுகிறது.
அறிவு சார்ந்த சமூகத்தில், பொறியியல் பட்டதாரிகள் புதுமையான வேலைகள், மேம்பட்ட சிந்தனை, சேவைகளுக்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், அவ்வாறு உள்ளவர்கள் மிகவும் குறைவான விழுக்காடு தான் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளைத் தொடர்பவர்களின் நிலையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. கல்வியில் தொழில் துறைக்கான திறன்கள் இல்லை. இந்த பட்டங்கள் வேலைவாய்ப்பில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.