டெல்லி: வாகனத்தை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை எளிதாக்க மத்திய அரசு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
அதன்படி புதிய வாகனங்களை பிஎச் (BH Bharat series) என துவங்கும் பதிவெண்ணில் வாகன உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது, அவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை வாகனங்களுக்கான பதிவை மாற்றுவது (transferring registration) தான்.
மோட்டார் வாகன சட்டப்படி, ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் ஒரு வருடத்திற்குள் புதிய மாநில அங்கீகாரத்துடன் புதிய வாகன பதிவைப் பெறுவது கட்டாயமாகும்.