டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று (மே 28) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக காலையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை, தமிழ்நாட்டு ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
பிரதமர் மோடி, செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் . ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், ஜிதேந்திர சிங், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே,பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது இந்து, கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் உள்ளிட்ட 12 மதங்களின் தலைவர்கள், தாங்கள் வழிபடும் கடவுள்களை நினைத்து, அவரவர்கள் வழக்கப்படி, சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இந்த விழாவில் தேவார பாடல்கள் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.