டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படங்கள், சீரிஸ்கள், செய்திகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதமான நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு ஓடிடி தள பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை பிரகாஷ் ஜவடேகர், பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, ஓடிடி தளங்களை சீர்திருத்தும் வகையிலும் சுய கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தும் நோக்கிலும் அரசு புதிய வழிமுறைகளை கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சினிமாவையும் தொலைக்காட்சியையும் ஒழுங்குப்படுத்தும்போது ஓடிடி தளங்களை ஏன் ஒழுங்குப்படுத்தக் கூடாது என அதன் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். அதன் காரணமாகவே, சுய கட்டுப்பாடு என்பதை மையப்படுத்தி அனைவருக்குமான தளத்தை உறுதிப்படுத்த முயற்சி எடுத்தோம்.
சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட புதிய விதிகளை ஓடிடி தளங்கள் வரவேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய விதிகள் சுயக்கட்டுப்பாட்டில் கவனம் செலத்துகிறதே தவிர தணிக்கை செய்வதில் அல்ல. முறையான குறை தீர்ப்பு அமைப்பை ஓடிடி தளம் உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார். ஆல்ட் பஜாஜ், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜியோ, ஜீ 5 உள்பட பல ஓடிடி தளங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.